Saturday, June 28, 2008

ROPE

ROPE- a hitchcock film

1948- ல் வெளியான Alfred Hitchcock-ன் ROPE திரைப்படம்.
ஒரு விருந்து நடக்க இருக்கிறது. இரண்டு கல்லூரி நண்பர்கள் Brandon, Philip இருவரும் சேர்ந்து மற்றொரு நண்பன் டேவிட் என்பவனைக் கயிற்றினால் இறுக்கி கொலை செய்கிறார்கள்.பின் உடலை விருந்து நடக்கவிருக்கும் அறையில் ஒரு பெரிய பெட்டியில் மறைக்கின்றனர். கொலைக்கான காரணம், அவர்களால் கொலை செய்துவிட்டு தப்ப முடியும் என்று நிருபிக்க. Being weak is a mistake. வலிமையானவர்களுக்கு வலிமையற்றவர்களை அப்புறப்படுத்தும் உரிமை இருக்கிறது என்ற கொள்கையினால் ஈர்க்கப்பட்டு.


http://www.youtube.com/v/aJo5ih2HkxE&hal


விருந்து தொடங்குகிறது. அழைக்கப்பட்டிருப்பவர்கள் இந்த கொள்கையை அவர்களுக்கு சொல்லிகொடுத்த ஆசிரியர், இறந்த நண்பனின் காதலி,அப்பா, அம்மா, மற்றுமொரு நண்பன். அவர்கள் விருந்து பரிமாறுவது, கொலை செய்யப்பட்டவனின் உடல் வைக்கப்பட்டுள்ள நீண்ட பெட்டியின் மீது துணி விரித்து. இதற்கிடையே விருந்துக்கு வருவதாக இருந்த கொலை செய்யப்பட்டவனை எல்லாரும் தேட தொடங்குகிறார்கள். இதனால் இரண்டு நண்பர்களில் ஒருவனான பிலிப் கலவரமடைய தொடங்குகிறான் . இவர்களைப் பற்றி அறிந்த ஆசிரியர் இவர்கள் மீது சந்தேகம் கொள்ள தொடங்குகிறார். ஆனால் இதனைப் பற்றி கவலை கொள்ளாத Brandon நண்பனைக் கொலை செய்த கயிற்றினாலேயே சில புத்தகங்களை கட்டி அவனுடைய அப்பாவுக்கு பரிசளிக்கிறான் . இதனைப் பார்த்து பிலிப் பயப்படுகிறான். இவர்களை கவனித்து கொண்டிருக்கும் ஆசிரியர் இவர்கள் செய்த கொலையைக் கண்டுபிடித்தாரா ?ஹிட்ச்காக்கின் சிறந்த படங்களின் வரிசையில் உள்ள இந்த படம் Patrick Hamilton-ன் ROPE ENDS என்ற ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டது .இந்த படத்தில் வரும் இரண்டு கதாபாத்திரங்கள் Brandon, Philips இருவரும் மாறுபட்ட குணநலன்களைக் கொண்டவர்கள். Brandon , தீர்மானமான எளிதில் உடையாதவனாகவும் , Philip மிகவும் பயந்தவனாகவும் இருக்கிறார்கள். மூல நாவலில் இருவரும் Homosexuals-ஆக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் திரைப்படத்தில் இது தவிர்க்கப்பட்டுள்ளது . ஆயினும் ஒரு சில வசனங்களில் இது மறைமுகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. இந்தப் படம் முழுவதும் ஒரு பெரிய அறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. Stage Play போன்ற தோற்றத்தில் படமாக்க பட்டிருந்தாலும் , இதில் கையாண்டுள்ள கேமரா நகர்வு மிக நுட்பமானது. காட்சிகள் ஆரம்பமானது முதல் இறுதிவரை தொடர்ச்சியாக நகர்கிறது.Reel மாற்றும்பொழுது மட்டுமே கேமரா கட் செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் அந்த தொடர்ச்சி மாறிவிட கூடாது என்பதற்காக ஏதேனும் முதுகிற்கு பின்னால் மறைந்து, ரீல் load செய்யப்பட்டு மறுபடியும் அங்கிருந்தே நகரத் தொடங்குவதால் படம் முழுவதும் ஒரு சில ஷாட்களில் எடுக்கப்பட்ட பிரமிப்பைத் தருகிறது.Arthur larents திரைக்கதை அமைத்திருக்கிறார்.
குற்ற உணர்வுகளையும், பதட்டங்களையும் காட்டும் க்ளோஸ்-அப் காட்சிகள் அழகு.ஆர்தரிடம், ஹிட்ச்காக் வசனங்களை பற்றி கூறியிருக்கிறார் " I want every sentence should be a gem" அதுபோல்தான் இருக்கிறது .ஒரு சிறிய அறைக்குள், அந்த அறையின் பாதி அளவு உள்ள கேமராவை ( அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னி கலர் கேமரா உங்கள் படுக்கை அறையில் பாதி சைஸ் இருக்கும் ) கையாண்ட விதமும் , அது கதாபாத்திரங்களின் பின்னே நகரும் மொழியும் கடினமான உழைப்பினால் கிடைத்தது .

இந்த படத்தை பற்றி இறுதியாக கூறுவதானால் " It was a great art of telling the story through the camera"
Thursday, June 19, 2008

பச்சை வாசம் பரவும் உடல் ..!

ஆரம்பித்தாயிற்று மற்றுமொரு மலையேறும் வைபவத்தை . பால்ய வயதுகளில் அதிசயத்தோடும் , பயத்தோடும் பார்த்த மலைகள் இப்போது நண்பர்களாகி இருக்கின்றன. சிவகங்கையில் மூன்றாவது படிக்கிம்பொழுது அந்த ஊரின் எல்லையில் இருந்து பார்க்கும்பொழுது , ஒரு கோட்டுச் சித்திரம்போல் மதுரையைச் சுற்றியுள்ள மலைகள் தெரியும் .எப்பொழுது அந்த சாலைகளைக் கடந்தாலும் பேருந்தின் வழியே கண்கள் மலையைத் தேடும். அப்போது ஆரம்பித்த மலைகளின் மீதான ஈர்ப்பு மோகமாக மாறி இன்றுவரை மாறாக் கவர்ச்சியாகவே இருக்கிறது.
இருக்கட்டும் ...

இந்த முறை மூணாறைச் சுற்றியுள்ள மலைகளில் Trekking போவதென்று முடிவு செய்யப்பட்டது. ஒரு ஜூன் மாத காலை வேளையில் மூணாறில் இறங்கியதும் கேரளாவின் தென் மேற்கு பருவ மழை வரவேற்க தொடங்கியது. மழை பெய்தால் trekking போக முடியாது. எனவே மழை பெய்யாமலிருக்க கடவுளை வேண்டியாச்சு . அவரும் அன்றைக்கு மழையை நிறுத்திவைக்க முயற்சிப்பதாக அறிவித்து விட்டார். நீங்கள் காணும் புகைப்படங்கள் silent Valley - மூணாறுக்கு அருகில் 20 KM தூரத்தில் உள்ளது .டாட்டாவின் தேயிலை தோட்டங்களை கடந்து சென்றால் இந்த மலைகளை பார்க்கலாம். மூணாறுக்கு வரும் தேனிலவு பெண்ணின் வெட்கத்தோடு வானத்தோடு ரகசியம் பேசிக்கொண்டிருக்கும் .
அறிந்திராத மலைகளில் பயணம் செய்யுமுன் சிறிது ஆர்வம் கலந்த பய உணர்வு மேலெழும்பும் .
எழும்பியது...


மலை ஏறத் தொடங்குமுன் இவைகள் நினைவில் இருக்கட்டும் . கொடிய மிருகங்கள் தென்படும் வாய்ப்பு இருக்கிறதா , இருப்பின் சிறு அரிவாள் அல்லது ஒரு நீண்ட கழி எடுத்து கொள்வது நல்லது. இந்த கழி பாதுகாப்புக்காகவும் , மண் அல்லது தரை தெரியாத இடங்களில் கால் வைக்கும்பொழுது பயன்படும். நல்ல எடையில்லாத grip உள்ள ஷூ அணிந்துகொள்ளுங்கள். தேவையான குடி தண்ணீர் அவசியம் . அருவிகள் அல்ல நீருற்றுகள் இருப்பின் பயமில்லை. மிக உயரமான , செங்குத்தான பாறைகளில் ஏறும்போது கீழே நீண்ட நேரம் பார்க்காதீர்கள், இல்லையெனில் இங்கிருந்து நாம் கீழே விழுந்தால் என்ன ஆகும் என்று மனசு சிந்திக்க ஆரம்பித்து நம்மையறிமலே நம் கால்கள் கீழே நழுவுவது போன்ற பிரமை ஏற்படும் . நெசமாதாங்க ..அனுபவித்தவர்களுக்கு நாம் சொல்வது புரியும் ..!

மலை ஏறி இறங்கியவுடன் குளியுங்கள். உங்கள் உடம்பில் உங்களை அறியாமல் பூச்சிகள் ஒட்டி கொண்டிருக்கும். பொதுவாக ஈரமான நேரங்களில் உங்களுக்குத் தெரியாமல் அட்டைகள் ஊறிகொண்டிருக்கும். அவைகளை எடுக்கும்பொழுது கொல கொலவென்று உங்கள் ரத்தம் கொட்ட நேரலாம் , பதட்டமடையாதீர்கள் ஒன்றும் செய்யாது. அட்டைகளை உங்கள் உடம்பில் இருந்து எடுக்க இயலவில்லை எனில் சிறிது உப்பை அவைகளின் மீது தூவினால் கரைந்து விடும்.

மலை ஏறுதல் ஒரு தியான அனுபவம் போன்றது . கவனமாக ஏறுங்கள், சந்தோஷமாக ஏறுங்கள். மலை உச்சியை சென்றடைவதைக் காட்டிலும் , சந்தோஷமாக மலை ஏறுவதுதான் நோக்கம்.எனவே மிதமான வேகத்தில் ஏறுங்கள் .இடையில் சற்று நில்லுங்கள் . செடிகளையும் , மரங்களையும் கவனியுங்கள். இன்னும் கூர்மையாக உட்படுத்திக் கொள்ளும்போது உங்களுக்கும் , அவைகளுக்கும் இடையே ஒரு மௌன தொடர்பு ஏற்படுவதை உணர முடியும் .

உச்சிக்கு சென்றவுடன் ஏற்படும் ஒரு வித மன நிறைவையும், மகிழ்ச்சியும் உற்று நோக்கும் பொழுது இன்னும் இரட்டிப்பாகும். வாழ்வில் ஒரு முறையேனும் மலை ஏறுங்கள் .நிறைய அனுபவங்களையும் , பாடங்களையும் கற்றுத் தரும். மனதைரியம் ,எதிர்பாரமைகளை சந்திப்பது, மற்றவர்கள் செய்ய தயங்குவதை நீங்கள் செய்கிற மகிழ்ச்சி, இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை , அடைந்தவுடன் அடுத்த என்ன என்ற கேள்வியுடன் திகைத்து நிற்கும் கணங்கள், இன்னும் இருக்கிறது சொல்லிகொண்டே போக ...
மலைகள் சூழ்ந்த பிரமாண்ட உச்சியில் நீங்கள் குழந்தையென நிற்கும்பொழுது , உங்களிடைய இருப்பு உலகத்தில் எவ்வளவு சின்னதென்று புரியும் . உங்கள் கர்வங்கள் களையும் . கர்வமற்று வாழ்தல் நன்று .
முடிந்தால் ஒரு முறையேனும் மலை ஏறுங்கள் ..ஆனால் பாதுகாப்பாக ..!