Sunday, November 16, 2008
பிரிவு
எப்படியேனும் நிகழ்ந்து விடுகிறது...
ஒரு பூ உதிர்வது போல்..
ஒரு இலை காற்றில் மிதந்து அலைவது போல் ....
துக்கம் கவிழும் ஒரு மாலை வேளையில்
நம்மீது விருப்பமானவர்கள்
கையசைத்து விடை பெற்றுச் செல்வதும் ....!
Saturday, October 4, 2008
நாளை
Sunday, September 21, 2008
Friday, August 15, 2008
நானும், என் கவிதையும் ...
மிதந்து அலையும் வார்த்தைகளைக் கோர்க்கத் தொடங்கியிருந்தேன்
நமக்கானதொரு கவிதைக்காக ..
அந்த அங்கிள் தனியா பேசுறார் பாரும்மா
பயத்துடன் தாயின் கையை இறுகப் பற்றுகிறாள்
கடந்து போகும் ஒரு சிறுமி..
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகும்
ஏங்கிக் கொண்டிருக்கிறது முற்றுப்பெறாத கவிதை
இன்னும் சிக்காத ஒரு வார்த்தைக்காக..
புள்ளியாய் தொலைவில் தோன்றி
புன்னகையுடன் அருகில் அமர்கிறாய்
என் முகம் உரசும் உன் கூந்தலிலிருந்து
உதிரத் தொடங்குகிறது அந்த வார்த்தை
முழுமையடைகிறோம்
நானும், என் கவிதையும் ...
Tuesday, August 12, 2008
சலாம் சினிமா
சலாம் சினிமா ( Salaam Cinema) .எனக்கு பிடித்த ஈரானிய சினிமாக்களில் ஒன்று . Mohsen Mokmalbaf , என் விருப்பமான இயக்குனரின் படம். சினிமாவின் அத்தனை பரிமாணங்களையும் பரிட்சித்து பார்க்கிற மனிதர்.
தன்னுடைய புதிய திரைப்படத்திற்கு நடிகர்களைத் தேர்வு செய்யப்போவதாக அறிவிக்கிறார் மோசென். சுமார் ஐந்தாயிரம் பேர் கூடுகின்றனர். விண்ணப்பப் படிவங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர். கூட்ட நெரிசல் ஒரு கலவர சூழ்நிலைப் போல் காட்சியளிக்கிறது. இறுதியாக ஒரு நீண்ட கூடத்தில் அனைவரும் ஒவ்வொருவராகவும் , குழுவாகவும் அழைக்கப்பட்டு நேர்முக தேர்வுத் செய்யப்படுகின்றனர் .
.
Mohsen நடிக்க வருபவர்களிடம் கேட்கும் கேள்விகளும், அதற்கு அவர்களின் எதிர்வினைகளும் முழுத் திரைப்படமாக இருக்கிறது. நடிப்பதற்காக குருடனாக வந்து ஏமாற்ற முயலும் இளைஞன் , அதனைக் கண்டுபிடித்தபின் இயக்குனருக்கும் அவனுக்கும் நடக்கும் விவாதங்கள், வெறும் ஆர்வத்தினால் மட்டுமே நடிப்பு என்றால் அறியாமல் வந்து அவர்கள் செய்யும் முயற்சிகள், கடை நிலை மனிதர்களுக்கு சினிமா மீதான ஈர்ப்பு , வெளிநாட்டில் உள்ள தன் காதலனைக் காண்பதற்காக சினிமாவில் நடிக்க வரும் இளம் பெண் என சுவராஸ்யமான மனிதர்களின் screening test- களின் தொகுப்பு இந்தப் படம்.
10 நொடிகளில் ஒருவனால் சிரிக்கவோ, கண்ணீர் விட்டு அழுகவோ இயலவில்லை எனில் அவர்களினால் நடிக்க முடியாது என்கிறார் . சிலரிடம் மிகக் கடினமான கேள்விகளும் வீசப்படுகின்றன. படத்தின் இறுதிப்பகுதி நடிக்க விரும்பும் இரண்டு இளம் பெண்களுக்கும் இயக்குனருக்கும் நிகழும் விவாதங்களாக பரவி இருக்கிறது .
சினிமாவில் நடிக்க விரும்பும் மனிதர்களுக்கும் , சிறந்த இயக்குனர் ஒருவருக்கும் நடக்கும் மிக நுட்பமான , உணர்வு ரீதியான ஆழமான உரையாடல்கள் , இயக்குனராகவோ , நடிகனாகவோ விரும்பும் அனைவருக்கும் நல்ல பயிற்சியாக அமையும் .
70 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் , எளிமையான ஒளி அமைப்புகளுடன் கூடிய அழகிய விவரணப் படம். மாற்று சினிமா பார்க்க விரும்பும் எல்லாருக்கும் இது ஒரு நல்ல படம் .
Tuesday, August 5, 2008
நழுவத் தொடங்குகிறது இரவு
வெளிச்சம் விடை கொடுக்கும் கணங்களில் ...
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்ற கேள்வியுடன் தொடங்குகிறது
உனக்கும் எனக்குமான தொலைபேசி உரையாடல் ...
கவிழத் தொடங்குகிறது இரவு
கண்கள் சொருகிய மோன நிலையில்
பரிமாறிக் கொள்ளப்படுகிறது அர்த்தமற்ற வார்த்தைகள்
தழுவத் தொடங்குகிறது இரவு
பரவிக் கிடக்கிறது
மின் அலைகளில் அஞ்சல் செய்யப்பட்ட
அழகான சிரிப்புகளும் , சிறு சீண்டல்களும்
நழுவத் தொடங்குகிறது இரவு
நாளை சமாதானம் செய்வதற்காகவே
உருவாக்கப்பட்ட மென் கோபங்களுடன்
முடிவுறுகிறது அந்த மணித் துளிகள் ...
கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுறீங்களா
அறை நண்பனின் பார்வையை
அலட்சியப்படுத்திக் கவிழ்கின்றன கண்கள்
ஒரு சிறு விளம்பர இடைவெளிக்குப் பின் ஆரம்பமாகிறது
நேற்றிரவு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நம் கனவுகள் ..!
- ரமேஷ் K
Saturday, August 2, 2008
கனவுகள் விழுங்கும் கடல்
கடல் உங்களுக்கு பிடிக்குமா? .கடலைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும்? கடல் இந்தப் பூமிப்பரப்பில் மற்றொரு உலகம் . சின்னஞ்சிறு வயதுகளில் அலைகளில் ஓடி விளையாடியிருப்பீர்கள்.மற்றொரு வயதில் அவைகளோடு நீச்சல் அடித்திருப்பீர்கள் .ஏதேனும் ஒரு மாலை வேளையில் காதலியோடு அமர்ந்து முத்தமிடுவதை அலைகள் ஓடி வந்து பார்த்துச் சென்றிருக்கும் . மத்திம வயதில் உங்கள் குழந்தைகளுக்கு மணல் வீடு கட்டியிருப்பதை வேடிக்கை பார்த்திருக்கும் . பின்னொரு பொழுதில் எல்லா மனிதர்களையும் தொலைத்த நாளில் தனித்திருப்பீர்கள் நீங்களும் , அலைகளும் .
கரை தாண்டாத அலைகளை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு விசித்திரமான நாளில் எல்லா அலைகளும் சேர்ந்து வந்து உங்களையும் , உங்கள் மனைவி , குழந்தைகள் , வீடு , நீங்கள் வளர்த்த செடிகள் , உங்களுக்கான கனவுகளையும் இழுத்துக் கொண்டு கடலுக்குள் ஒளிவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா ?
ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் .
அது 1964-ம் வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி நள்ளிரவு . தனுஷ்கோடி அப்பொழுது ஒரு அழகான கடற்கரை நகரம் . கடல் கொஞ்சும் அழகும் , மீன்படி வியாபாரமும் , நேசமான மனிதர்களும் நிரம்பிய இடம் .இந்தியப் பெருங்கடலும் , வங்காள விரிகுடாவும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக்கொள்ளும் இடம் . இந்தியப் பெருங்கண்டத்தின் கடைசி நிலச் சொட்டு . இங்கிருந்து இலங்கையின் தலை மன்னார் 18 km தான் .ஒரு தம் பிடித்து நீந்தினால் , இலங்கையை தொட்டுவிடலாம் . இங்குதான் ராமர் பாலம் என்ற மணல் திட்டுகளை சேது சமுத்திர திட்டத்துக்காக ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .
சரி. இனி அந்தப் பயங்கரம் நிரம்பிய இரவு . 22-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய புயலில் கடல் சீறி எழும்பியது . ஒரு பனை அளவுக்கு உயர்ந்த அலைகள் ஊருக்குள் பிரவேசித்து தன் கண்ணில் பட்ட அனைத்தையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது . சில மணி நேரங்கள் என்றால் போராடி பார்த்திருப்பார்கள் . ஆனால் நள்ளிரவி ல் தொடங்கிய புயலும் , எழுந்த அலைகளும் அடுத்த நாள் 23-ம் தேதி மாலை வரை தன் கைக்கு எட்டிய ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் , ஆடு , மாடு , படகுகள் , வீடுகள், மருத்துவமனை , தேவாலயம் , மரங்கள் , மனிதர்கள் , அவர்களின் கனவுகள் , கடவுள்கள் அனைவரையும் துரத்திப் பிடித்து இழுத்துச் சென்றிருக்கிறது.ஓடும் ரயிலில் உள்ள 110 பயணிகள் உட்பட சுமார் 400 மனிதர்களை தன்னுடன் கடலுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது . இன்று அந்த சிதிலமடைந்த ரயில் பாதையும் , தேவாலயமும் , இடிந்த வீடுகளும் கடலை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கின்றன . சூன்யம் நிரம்பிய அமைதி , துக்கத்தின் வாசனையை பரப்பிக் கொண்டிருக்கிறது .
ஒரு மழைக்கால சாயங்கால வேளையில் , அந்த கடலுக்கு முன் நின்றிருந்தேன். மற்ற கடல்களில் என் கால்களை நனைக்க ஓடி வரும் அலைகளைக் கண்டு புன்னகை செய்யும் எனக்கு அன்று சிரிக்கத் தோன்றவில்லை. எதிர் நோக்கி இருந்த அலைகள் சிறு புன்னகையுடன் என் கால்களை முத்தமிட்டுச் சென்றன . அன்று இரவில் எல்லாருடைய கனவுகளையும் தனக்குள் இட்டுச் சென்றது அந்த அலைகள்தானா என்று தெரியவில்லை.என் கால் அருகே கசிந்து கொண்டிருந்தது அந்த நள்ளிரவில் தொலைந்த உயிர்களின் கண்ணீர் .
முன்னொரு நாளில் உயிர்கள் தொலைந்த அந்தக் கடலின் கரையில் உயிர்களைச் சுமந்தபடி , மிச்சமுள்ள கனவுகளுடன் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள், இலங்கையிலிருந்து தப்பி வந்த தமிழ் அகதிகள் .
முடிந்தால் ஒருமுறை அங்கு சென்று வாருங்கள் , திரும்புகையில் வாழ்வினை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கியிருப்பீர்கள்.