Friday, August 15, 2008

நானும், என் கவிதையும் ...

நானும், என் கவிதையும் ...


உன் வருகைக்காகக் காத்திருந்த நேரங்களில்தான்
மிதந்து அலையும் வார்த்தைகளைக் கோர்க்கத் தொடங்கியிருந்தேன்
நமக்கானதொரு கவிதைக்காக ..

அந்த அங்கிள் தனியா பேசுறார் பாரும்மா
பயத்துடன் தாயின் கையை இறுகப் பற்றுகிறாள்
கடந்து போகும் ஒரு சிறுமி..

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகும்
ஏங்கிக் கொண்டிருக்கிறது முற்றுப்பெறாத கவிதை
இன்னும் சிக்காத ஒரு வார்த்தைக்காக..

புள்ளியாய் தொலைவில் தோன்றி
புன்னகையுடன் அருகில் அமர்கிறாய்

என் முகம் உரசும் உன் கூந்தலிலிருந்து
உதிரத் தொடங்குகிறது அந்த வார்த்தை

முழுமையடைகிறோம்
நானும், என் கவிதையும் ...
-ரமேஷ் K

Tuesday, August 12, 2008

சலாம் சினிமா


சலாம் சினிமா
சலாம் சினிமா ( Salaam Cinema) .எனக்கு பிடித்த ஈரானிய சினிமாக்களில் ஒன்று . Mohsen Mokmalbaf , என் விருப்பமான இயக்குனரின் படம். சினிமாவின் அத்தனை பரிமாணங்களையும் பரிட்சித்து பார்க்கிற மனிதர்.
இனி ..
தன்னுடைய புதிய திரைப்படத்திற்கு நடிகர்களைத் தேர்வு செய்யப்போவதாக அறிவிக்கிறார் மோசென். சுமார் ஐந்தாயிரம் பேர் கூடுகின்றனர். விண்ணப்பப் படிவங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர். கூட்ட நெரிசல் ஒரு கலவர சூழ்நிலைப் போல் காட்சியளிக்கிறது. இறுதியாக ஒரு நீண்ட கூடத்தில் அனைவரும் ஒவ்வொருவராகவும் , குழுவாகவும் அழைக்கப்பட்டு நேர்முக தேர்வுத் செய்யப்படுகின்றனர் .

.


Mohsen நடிக்க வருபவர்களிடம் கேட்கும் கேள்விகளும், அதற்கு அவர்களின் எதிர்வினைகளும் முழுத் திரைப்படமாக இருக்கிறது. நடிப்பதற்காக குருடனாக வந்து ஏமாற்ற முயலும் இளைஞன் , அதனைக் கண்டுபிடித்தபின் இயக்குனருக்கும் அவனுக்கும் நடக்கும் விவாதங்கள், வெறும் ஆர்வத்தினால் மட்டுமே நடிப்பு என்றால் அறியாமல் வந்து அவர்கள் செய்யும் முயற்சிகள், கடை நிலை மனிதர்களுக்கு சினிமா மீதான ஈர்ப்பு , வெளிநாட்டில் உள்ள தன் காதலனைக் காண்பதற்காக சினிமாவில் நடிக்க வரும் இளம் பெண் என சுவராஸ்யமான மனிதர்களின் screening test- களின் தொகுப்பு இந்தப் படம்.

10 நொடிகளில் ஒருவனால் சிரிக்கவோ, கண்ணீர் விட்டு அழுகவோ இயலவில்லை எனில் அவர்களினால் நடிக்க முடியாது என்கிறார் . சிலரிடம் மிகக் கடினமான கேள்விகளும் வீசப்படுகின்றன. படத்தின் இறுதிப்பகுதி நடிக்க விரும்பும் இரண்டு இளம் பெண்களுக்கும் இயக்குனருக்கும் நிகழும் விவாதங்களாக பரவி இருக்கிறது .

சினிமாவில் நடிக்க விரும்பும் மனிதர்களுக்கும் , சிறந்த இயக்குனர் ஒருவருக்கும் நடக்கும் மிக நுட்பமான , உணர்வு ரீதியான ஆழமான உரையாடல்கள் , இயக்குனராகவோ , நடிகனாகவோ விரும்பும் அனைவருக்கும் நல்ல பயிற்சியாக அமையும் .


70 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் , எளிமையான ஒளி அமைப்புகளுடன் கூடிய அழகிய விவரணப் படம். மாற்று சினிமா பார்க்க விரும்பும் எல்லாருக்கும் இது ஒரு நல்ல படம் .

Tuesday, August 5, 2008

நழுவத் தொடங்குகிறது இரவு

நழுவத் தொடங்குகிறது இரவு



வெளிச்சம் விடை கொடுக்கும் கணங்களில் ...

என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்ற கேள்வியுடன் தொடங்குகிறது
உனக்கும் எனக்குமான தொலைபேசி உரையாடல் ...

கவிழத் தொடங்குகிறது இரவு
கண்கள் சொருகிய மோன நிலையில்
பரிமாறிக் கொள்ளப்படுகிறது அர்த்தமற்ற வார்த்தைகள்

தழுவத் தொடங்குகிறது இரவு
பரவிக் கிடக்கிறது
மின் அலைகளில் அஞ்சல் செய்யப்பட்ட
அழகான சிரிப்புகளும் , சிறு சீண்டல்களும்

நழுவத் தொடங்குகிறது இரவு
நாளை சமாதானம் செய்வதற்காகவே
உருவாக்கப்பட்ட மென் கோபங்களுடன்
முடிவுறுகிறது அந்த மணித் துளிகள் ...

கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுறீங்களா
அறை நண்பனின் பார்வையை
அலட்சியப்படுத்திக் கவிழ்கின்றன கண்கள்

ஒரு சிறு விளம்பர இடைவெளிக்குப் பின் ஆரம்பமாகிறது
நேற்றிரவு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நம் கனவுகள் ..!

- ரமேஷ் K


Saturday, August 2, 2008

கனவுகள் விழுங்கும் கடல்

கனவுகள் விழுங்கும் கடல்


கடல் உங்களுக்கு பிடிக்குமா? .கடலைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும்? கடல் இந்தப் பூமிப்பரப்பில் மற்றொரு உலகம் . சின்னஞ்சிறு வயதுகளில் அலைகளில் ஓடி விளையாடியிருப்பீர்கள்.மற்றொரு வயதில் அவைகளோடு நீச்சல் அடித்திருப்பீர்கள் .ஏதேனும் ஒரு மாலை வேளையில் காதலியோடு அமர்ந்து முத்தமிடுவதை அலைகள் ஓடி வந்து பார்த்துச் சென்றிருக்கும் . மத்திம வயதில் உங்கள் குழந்தைகளுக்கு மணல் வீடு கட்டியிருப்பதை வேடிக்கை பார்த்திருக்கும் . பின்னொரு பொழுதில் எல்லா மனிதர்களையும் தொலைத்த நாளில் தனித்திருப்பீர்கள் நீங்களும் , அலைகளும் .

கரை தாண்டாத அலைகளை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு விசித்திரமான நாளில் எல்லா அலைகளும் சேர்ந்து வந்து உங்களையும் , உங்கள் மனைவி , குழந்தைகள் , வீடு , நீங்கள் வளர்த்த செடிகள் , உங்களுக்கான கனவுகளையும் இழுத்துக் கொண்டு கடலுக்குள் ஒளிவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா ?


ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் .
அது 1964-ம் வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி நள்ளிரவு . தனுஷ்கோடி அப்பொழுது ஒரு அழகான கடற்கரை நகரம் . கடல் கொஞ்சும் அழகும் , மீன்படி வியாபாரமும் , நேசமான மனிதர்களும் நிரம்பிய இடம் .இந்தியப் பெருங்கடலும் , வங்காள விரிகுடாவும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக்கொள்ளும் இடம் . இந்தியப் பெருங்கண்டத்தின் கடைசி நிலச் சொட்டு . இங்கிருந்து இலங்கையின் தலை மன்னார் 18 km தான் .ஒரு தம் பிடித்து நீந்தினால் , இலங்கையை தொட்டுவிடலாம் . இங்குதான் ராமர் பாலம் என்ற மணல் திட்டுகளை சேது சமுத்திர திட்டத்துக்காக ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .




சரி. இனி அந்தப் பயங்கரம் நிரம்பிய இரவு . 22-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய புயலில் கடல் சீறி எழும்பியது . ஒரு பனை அளவுக்கு உயர்ந்த அலைகள் ஊருக்குள் பிரவேசித்து தன் கண்ணில் பட்ட அனைத்தையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது . சில மணி நேரங்கள் என்றால் போராடி பார்த்திருப்பார்கள் . ஆனால் நள்ளிரவி ல் தொடங்கிய புயலும் , எழுந்த அலைகளும் அடுத்த நாள் 23-ம் தேதி மாலை வரை தன் கைக்கு எட்டிய ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் , ஆடு , மாடு , படகுகள் , வீடுகள், மருத்துவமனை , தேவாலயம் , மரங்கள் , மனிதர்கள் , அவர்களின் கனவுகள் , கடவுள்கள் அனைவரையும் துரத்திப் பிடித்து இழுத்துச் சென்றிருக்கிறது.ஓடும் ரயிலில் உள்ள 110 பயணிகள் உட்பட சுமார் 400 மனிதர்களை தன்னுடன் கடலுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது . இன்று அந்த சிதிலமடைந்த ரயில் பாதையும் , தேவாலயமும் , இடிந்த வீடுகளும் கடலை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கின்றன . சூன்யம் நிரம்பிய அமைதி , துக்கத்தின் வாசனையை பரப்பிக் கொண்டிருக்கிறது .

ஒரு மழைக்கால சாயங்கால வேளையில் , அந்த கடலுக்கு முன் நின்றிருந்தேன். மற்ற கடல்களில் என் கால்களை நனைக்க ஓடி வரும் அலைகளைக் கண்டு புன்னகை செய்யும் எனக்கு அன்று சிரிக்கத் தோன்றவில்லை. எதிர் நோக்கி இருந்த அலைகள் சிறு புன்னகையுடன் என் கால்களை முத்தமிட்டுச் சென்றன . அன்று இரவில் எல்லாருடைய கனவுகளையும் தனக்குள் இட்டுச் சென்றது அந்த அலைகள்தானா என்று தெரியவில்லை.என் கால் அருகே கசிந்து கொண்டிருந்தது அந்த நள்ளிரவில் தொலைந்த உயிர்களின் கண்ணீர் .



முன்னொரு நாளில் உயிர்கள் தொலைந்த அந்தக் கடலின் கரையில் உயிர்களைச் சுமந்தபடி , மிச்சமுள்ள கனவுகளுடன் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள், இலங்கையிலிருந்து தப்பி வந்த தமிழ் அகதிகள் .

முடிந்தால் ஒருமுறை அங்கு சென்று வாருங்கள் , திரும்புகையில் வாழ்வினை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கியிருப்பீர்கள்.

Monday, July 14, 2008

நகரத்து வீடு

என் நகரத்துத் தெருக்களில்
கதவுகள் திறந்து கிடப்பதில்லை...

பூட்டிய வீடுகளில்
புடுங்கிக் கொண்டிருக்கிறது
புரையோடிப் போன மனசு..

Sunday, July 6, 2008

ராஜீவ் மேனன் பேட்டி

ராஜீவ் மேனன் பேட்டி :

இந்த ஞாயிறு குமுதம்.காமில் ராஜீவ் மேனனுடைய பேட்டி பார்த்தேன். தமிழ் சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ரொம்ப stylish ஆனவர் . தோற்றத்திலும் , பிரேம்களிலும். தன்னுடைய விளம்பர படங்கள் , மணியுனுடைய நட்பு, Mindscreen institute, பம்பாய் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சார கனவு ஆகிய அனுபவங்களை பேசுகிறார்.

http://www.kumudam.com/webtv_streaming.php?catid=50&strid=2905&leftid=6&type=kumudam%20Cinema


ராஜீவ் மேனனுடைய படங்களில் பாட்டுக்கள் ரசிக்ககூடியதாக இருப்பதற்கான காரணம்: பாடலின் இசை தனக்குள் இருக்கும் சிறுவனை ஈர்க்கக் கூடியதாக இருந்தால் அதனை செலக்ட் செய்துவிடுகிறார். தனக்குள் இருக்கும் சங்கீதம் அறிந்த வளர்ந்த மனிதனை அச்சமயத்தில் பொருட்படுத்துவதில்லை.

Saturday, June 28, 2008

ROPE

ROPE- a hitchcock film

1948- ல் வெளியான Alfred Hitchcock-ன் ROPE திரைப்படம்.
ஒரு விருந்து நடக்க இருக்கிறது. இரண்டு கல்லூரி நண்பர்கள் Brandon, Philip இருவரும் சேர்ந்து மற்றொரு நண்பன் டேவிட் என்பவனைக் கயிற்றினால் இறுக்கி கொலை செய்கிறார்கள்.பின் உடலை விருந்து நடக்கவிருக்கும் அறையில் ஒரு பெரிய பெட்டியில் மறைக்கின்றனர். கொலைக்கான காரணம், அவர்களால் கொலை செய்துவிட்டு தப்ப முடியும் என்று நிருபிக்க. Being weak is a mistake. வலிமையானவர்களுக்கு வலிமையற்றவர்களை அப்புறப்படுத்தும் உரிமை இருக்கிறது என்ற கொள்கையினால் ஈர்க்கப்பட்டு.


http://www.youtube.com/v/aJo5ih2HkxE&hal


விருந்து தொடங்குகிறது. அழைக்கப்பட்டிருப்பவர்கள் இந்த கொள்கையை அவர்களுக்கு சொல்லிகொடுத்த ஆசிரியர், இறந்த நண்பனின் காதலி,அப்பா, அம்மா, மற்றுமொரு நண்பன். அவர்கள் விருந்து பரிமாறுவது, கொலை செய்யப்பட்டவனின் உடல் வைக்கப்பட்டுள்ள நீண்ட பெட்டியின் மீது துணி விரித்து. இதற்கிடையே விருந்துக்கு வருவதாக இருந்த கொலை செய்யப்பட்டவனை எல்லாரும் தேட தொடங்குகிறார்கள். இதனால் இரண்டு நண்பர்களில் ஒருவனான பிலிப் கலவரமடைய தொடங்குகிறான் . இவர்களைப் பற்றி அறிந்த ஆசிரியர் இவர்கள் மீது சந்தேகம் கொள்ள தொடங்குகிறார். ஆனால் இதனைப் பற்றி கவலை கொள்ளாத Brandon நண்பனைக் கொலை செய்த கயிற்றினாலேயே சில புத்தகங்களை கட்டி அவனுடைய அப்பாவுக்கு பரிசளிக்கிறான் . இதனைப் பார்த்து பிலிப் பயப்படுகிறான். இவர்களை கவனித்து கொண்டிருக்கும் ஆசிரியர் இவர்கள் செய்த கொலையைக் கண்டுபிடித்தாரா ?



ஹிட்ச்காக்கின் சிறந்த படங்களின் வரிசையில் உள்ள இந்த படம் Patrick Hamilton-ன் ROPE ENDS என்ற ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டது .இந்த படத்தில் வரும் இரண்டு கதாபாத்திரங்கள் Brandon, Philips இருவரும் மாறுபட்ட குணநலன்களைக் கொண்டவர்கள். Brandon , தீர்மானமான எளிதில் உடையாதவனாகவும் , Philip மிகவும் பயந்தவனாகவும் இருக்கிறார்கள். மூல நாவலில் இருவரும் Homosexuals-ஆக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் திரைப்படத்தில் இது தவிர்க்கப்பட்டுள்ளது . ஆயினும் ஒரு சில வசனங்களில் இது மறைமுகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. இந்தப் படம் முழுவதும் ஒரு பெரிய அறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. Stage Play போன்ற தோற்றத்தில் படமாக்க பட்டிருந்தாலும் , இதில் கையாண்டுள்ள கேமரா நகர்வு மிக நுட்பமானது. காட்சிகள் ஆரம்பமானது முதல் இறுதிவரை தொடர்ச்சியாக நகர்கிறது.Reel மாற்றும்பொழுது மட்டுமே கேமரா கட் செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் அந்த தொடர்ச்சி மாறிவிட கூடாது என்பதற்காக ஏதேனும் முதுகிற்கு பின்னால் மறைந்து, ரீல் load செய்யப்பட்டு மறுபடியும் அங்கிருந்தே நகரத் தொடங்குவதால் படம் முழுவதும் ஒரு சில ஷாட்களில் எடுக்கப்பட்ட பிரமிப்பைத் தருகிறது.











Arthur larents திரைக்கதை அமைத்திருக்கிறார்.
குற்ற உணர்வுகளையும், பதட்டங்களையும் காட்டும் க்ளோஸ்-அப் காட்சிகள் அழகு.ஆர்தரிடம், ஹிட்ச்காக் வசனங்களை பற்றி கூறியிருக்கிறார் " I want every sentence should be a gem" அதுபோல்தான் இருக்கிறது .ஒரு சிறிய அறைக்குள், அந்த அறையின் பாதி அளவு உள்ள கேமராவை ( அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னி கலர் கேமரா உங்கள் படுக்கை அறையில் பாதி சைஸ் இருக்கும் ) கையாண்ட விதமும் , அது கதாபாத்திரங்களின் பின்னே நகரும் மொழியும் கடினமான உழைப்பினால் கிடைத்தது .

இந்த படத்தை பற்றி இறுதியாக கூறுவதானால் " It was a great art of telling the story through the camera"