
எப்படியேனும் நிகழ்ந்து விடுகிறது...
ஒரு பூ உதிர்வது போல்..
ஒரு இலை காற்றில் மிதந்து அலைவது போல் ....
துக்கம் கவிழும் ஒரு மாலை வேளையில்
நம்மீது விருப்பமானவர்கள்
கையசைத்து விடை பெற்றுச் செல்வதும் ....!
சரி. இனி அந்தப் பயங்கரம் நிரம்பிய இரவு . 22-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய புயலில் கடல் சீறி எழும்பியது . ஒரு பனை அளவுக்கு உயர்ந்த அலைகள் ஊருக்குள் பிரவேசித்து தன் கண்ணில் பட்ட அனைத்தையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது . சில மணி நேரங்கள் என்றால் போராடி பார்த்திருப்பார்கள் . ஆனால் நள்ளிரவி ல் தொடங்கிய புயலும் , எழுந்த அலைகளும் அடுத்த நாள் 23-ம் தேதி மாலை வரை தன் கைக்கு எட்டிய ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் , ஆடு , மாடு , படகுகள் , வீடுகள், மருத்துவமனை , தேவாலயம் , மரங்கள் , மனிதர்கள் , அவர்களின் கனவுகள் , கடவுள்கள் அனைவரையும் துரத்திப் பிடித்து இழுத்துச் சென்றிருக்கிறது.ஓடும் ரயிலில் உள்ள 110 பயணிகள் உட்பட சுமார் 400 மனிதர்களை தன்னுடன் கடலுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது . இன்று அந்த சிதிலமடைந்த ரயில் பாதையும் , தேவாலயமும் , இடிந்த வீடுகளும் கடலை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கின்றன . சூன்யம் நிரம்பிய அமைதி , துக்கத்தின் வாசனையை பரப்பிக் கொண்டிருக்கிறது .
ஒரு மழைக்கால சாயங்கால வேளையில் , அந்த கடலுக்கு முன் நின்றிருந்தேன். மற்ற கடல்களில் என் கால்களை நனைக்க ஓடி வரும் அலைகளைக் கண்டு புன்னகை செய்யும் எனக்கு அன்று சிரிக்கத் தோன்றவில்லை. எதிர் நோக்கி இருந்த அலைகள் சிறு புன்னகையுடன் என் கால்களை முத்தமிட்டுச் சென்றன . அன்று இரவில் எல்லாருடைய கனவுகளையும் தனக்குள் இட்டுச் சென்றது அந்த அலைகள்தானா என்று தெரியவில்லை.என் கால் அருகே கசிந்து கொண்டிருந்தது அந்த நள்ளிரவில் தொலைந்த உயிர்களின் கண்ணீர் .
முன்னொரு நாளில் உயிர்கள் தொலைந்த அந்தக் கடலின் கரையில் உயிர்களைச் சுமந்தபடி , மிச்சமுள்ள கனவுகளுடன் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள், இலங்கையிலிருந்து தப்பி வந்த தமிழ் அகதிகள் .
முடிந்தால் ஒருமுறை அங்கு சென்று வாருங்கள் , திரும்புகையில் வாழ்வினை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கியிருப்பீர்கள்.