Saturday, August 2, 2008

கனவுகள் விழுங்கும் கடல்

கனவுகள் விழுங்கும் கடல்


கடல் உங்களுக்கு பிடிக்குமா? .கடலைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும்? கடல் இந்தப் பூமிப்பரப்பில் மற்றொரு உலகம் . சின்னஞ்சிறு வயதுகளில் அலைகளில் ஓடி விளையாடியிருப்பீர்கள்.மற்றொரு வயதில் அவைகளோடு நீச்சல் அடித்திருப்பீர்கள் .ஏதேனும் ஒரு மாலை வேளையில் காதலியோடு அமர்ந்து முத்தமிடுவதை அலைகள் ஓடி வந்து பார்த்துச் சென்றிருக்கும் . மத்திம வயதில் உங்கள் குழந்தைகளுக்கு மணல் வீடு கட்டியிருப்பதை வேடிக்கை பார்த்திருக்கும் . பின்னொரு பொழுதில் எல்லா மனிதர்களையும் தொலைத்த நாளில் தனித்திருப்பீர்கள் நீங்களும் , அலைகளும் .

கரை தாண்டாத அலைகளை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு விசித்திரமான நாளில் எல்லா அலைகளும் சேர்ந்து வந்து உங்களையும் , உங்கள் மனைவி , குழந்தைகள் , வீடு , நீங்கள் வளர்த்த செடிகள் , உங்களுக்கான கனவுகளையும் இழுத்துக் கொண்டு கடலுக்குள் ஒளிவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா ?


ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் .
அது 1964-ம் வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி நள்ளிரவு . தனுஷ்கோடி அப்பொழுது ஒரு அழகான கடற்கரை நகரம் . கடல் கொஞ்சும் அழகும் , மீன்படி வியாபாரமும் , நேசமான மனிதர்களும் நிரம்பிய இடம் .இந்தியப் பெருங்கடலும் , வங்காள விரிகுடாவும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக்கொள்ளும் இடம் . இந்தியப் பெருங்கண்டத்தின் கடைசி நிலச் சொட்டு . இங்கிருந்து இலங்கையின் தலை மன்னார் 18 km தான் .ஒரு தம் பிடித்து நீந்தினால் , இலங்கையை தொட்டுவிடலாம் . இங்குதான் ராமர் பாலம் என்ற மணல் திட்டுகளை சேது சமுத்திர திட்டத்துக்காக ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .




சரி. இனி அந்தப் பயங்கரம் நிரம்பிய இரவு . 22-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய புயலில் கடல் சீறி எழும்பியது . ஒரு பனை அளவுக்கு உயர்ந்த அலைகள் ஊருக்குள் பிரவேசித்து தன் கண்ணில் பட்ட அனைத்தையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது . சில மணி நேரங்கள் என்றால் போராடி பார்த்திருப்பார்கள் . ஆனால் நள்ளிரவி ல் தொடங்கிய புயலும் , எழுந்த அலைகளும் அடுத்த நாள் 23-ம் தேதி மாலை வரை தன் கைக்கு எட்டிய ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் , ஆடு , மாடு , படகுகள் , வீடுகள், மருத்துவமனை , தேவாலயம் , மரங்கள் , மனிதர்கள் , அவர்களின் கனவுகள் , கடவுள்கள் அனைவரையும் துரத்திப் பிடித்து இழுத்துச் சென்றிருக்கிறது.ஓடும் ரயிலில் உள்ள 110 பயணிகள் உட்பட சுமார் 400 மனிதர்களை தன்னுடன் கடலுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது . இன்று அந்த சிதிலமடைந்த ரயில் பாதையும் , தேவாலயமும் , இடிந்த வீடுகளும் கடலை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கின்றன . சூன்யம் நிரம்பிய அமைதி , துக்கத்தின் வாசனையை பரப்பிக் கொண்டிருக்கிறது .

ஒரு மழைக்கால சாயங்கால வேளையில் , அந்த கடலுக்கு முன் நின்றிருந்தேன். மற்ற கடல்களில் என் கால்களை நனைக்க ஓடி வரும் அலைகளைக் கண்டு புன்னகை செய்யும் எனக்கு அன்று சிரிக்கத் தோன்றவில்லை. எதிர் நோக்கி இருந்த அலைகள் சிறு புன்னகையுடன் என் கால்களை முத்தமிட்டுச் சென்றன . அன்று இரவில் எல்லாருடைய கனவுகளையும் தனக்குள் இட்டுச் சென்றது அந்த அலைகள்தானா என்று தெரியவில்லை.என் கால் அருகே கசிந்து கொண்டிருந்தது அந்த நள்ளிரவில் தொலைந்த உயிர்களின் கண்ணீர் .



முன்னொரு நாளில் உயிர்கள் தொலைந்த அந்தக் கடலின் கரையில் உயிர்களைச் சுமந்தபடி , மிச்சமுள்ள கனவுகளுடன் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள், இலங்கையிலிருந்து தப்பி வந்த தமிழ் அகதிகள் .

முடிந்தால் ஒருமுறை அங்கு சென்று வாருங்கள் , திரும்புகையில் வாழ்வினை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கியிருப்பீர்கள்.

1 comment:

Anna said...

very good portrayal of seas and human emotions